கரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வருமானம் இழந்து வாழ்க்கை நடத்தி வரும் சூழலில் மதுக்கடைகள் இல்லாமல் இருந்தால் மதுவுக்காக செலவிடும் பணத்தை உணவுப் பொருள்கள் வாங்க செலவு செய்வர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்கவும், டாஸ்மாக் கடையை திறப்பது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யவும் கோரி மதுரையைச் சேர்ந்த போனிபாஸ், சி.செல்வகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸில் இன்று விசாரித்தனர். பின்னர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தும், ஆன்லைனில் மதுபானம் விற்க அனுமதி வழங்கியும் சென்னை உயர் நீதிமன்றம் மே 8-ல் பிறப்பித்த உத்தரவு இந்த மனுக்களுக்கும் பொருந்தும் என்றும், இந்த இரு மனுக்களையும் டாஸ்மாக் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களுடன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை திறந்ததாக அரசு கூறியுள்ளது. அது ஒரு பக்கம் நல்லதாக தெரிந்தாலும், தீமைகள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உள்ளனர். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக செலவிடும் பணத்தை கடைகள் மூடப்பட்டிருந்தால் ஏழைகள், நடுத்தர மக்கள் வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க பயன்படுத்துவார்கள்.
ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சிறு சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. அதி்ல் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டதால் நீதிமன்றம் ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
மனுதாரர்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுமாறு கோரவில்லை. ஊரடங்கு அமலில் இருப்பதால் கொஞ்ச நாட்களுக்கு மூடி வைக்குமாறு தான் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது எனக் கூறியுள்ளனர்.
நீதிபதிகள் 26 பக்க உத்தரவில் மதுவின் தீமை குறித்த ‘துஞ்சினா செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர்’ என்ற திருக்குறளையும், மகாத்மா காந்தி, அம்பேத்கார் ஆகியோரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.