ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில் ரயில்பாதைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சமூக இடைவெளியின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள ச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு மே 17 ம் தேதிவரை அமலில் இருந்தாலும் பல தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதையடுத்து ரயில்களை இயக்குவதற்கு ரயில்நிர்வாகம் ஆயத்தபணிகளை தொடங்கியுள்ளது.
பயணிகள் ரயில்நிலையத்திற்குள் வரும்போதும், வெளியில் செல்லும்போது கைகளை கழுவ சோப்புநீர் மற்றும் தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நடைமேடையில் வட்டங்கள் இடப்பட்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக ரயில்கள் இயக்கப்படாததால், தண்டவாளங்களை சரிபார்க்கும் பணியில் ரயில்வே பணியாளர்களை ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் நடந்தே சென்று தண்டவாளங்கள் சீராக உள்ளனவா என ஆய்வு செய்து சீரமைத்துவருகின்றனர்.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிலாளர்கள் மொத்தமாக கூடி பணிகளில் ஈடுபடுவதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகள் நடைபெற, குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தவும், ஷிப்ட் முறையில் பணியாளர்களை பணிகளை மேற்கொள்ளச் செய்யவும் ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் என, பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
ரயில்நிலையத்தில் கைகழுவுதல், சமூக இடைவெளி ஆகியவை முறையாக கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும்நிலையில், ரயில்வே தொழிலாளர்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச்செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ரயில்வே பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.