தமிழகம்

ஊரடங்கினால் ஏலக்காய் தோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் முற்றிலும் பாதிப்பு: கேரளாவிற்கு செல்ல அனுமதி கேட்கும் விவசாயிகள்

என்.கணேஷ்ராஜ்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை ஏலச்செடிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் ஊரடங்கினால் தமிழக விவசாயிகள் அங்கு சென்று பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 70 சதவீத ஏலக்காய்உற்பத்தி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலே விளைகிறது. சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இதற்கான விவசாயம் நடைபெற்று வருகிறது.

மூணாறு, வண்டன்மேடு, கல்தொட்டி, புளியமரம், தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிகளவில் தோட்டங்கள் உள்ளது.

இங்குள்ள 45சதவீத தோட்டங்கள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு உரியது. பல தலைமுறையாக இவர்கள் இங்கு ஏலவிவசாயம் செய்து வருகின்றனர்.

ஏலக்காய்களைப் பொறுத்தளவில் நாற்று நடப்பட்ட 2ஆண்டுகளுக்கு பிறகு மகசூல் கிடைக்கும். 4வது ஆண்டில் இருந்து அதிக விளைச்சல் இருக்கும். தொடர்ந்து 12ஆண்டுகள் பலன்கொடுக்கும்.

இங்கு விளையும் ஏலக்காய்களை விவசாயிகளிடம் இருந்து ஏல நிறுவனங்கள் சேகரிக்கின்றன. பின்பு நறுமணப் பொருட்கள் வாரியத்தின் மின்னணு ஏல மையங்களான போடி, கேரள மாநிலம் புத்தடி ஆகிய இடங்களுக்கு கொண்டு வந்து ஏலத்தை நடத்துகின்றன.

ஏலக்காயைப் பொறுத்தளவில் அதன் விலையை பச்சை நிறம், அளவு, எடை உள்ளிட்டவை தீர்மானிக்கிறது.

தற்போது கரோனா ஊரடங்கினால் ஏல விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏலமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. ஏலச்செடிகளில் சரம் அதிகளவில் கிளைவிட்டு வளர்ந்துள்ளது.

ஆனால் கேரளா செல்ல தமிழக விவசாயிகளுக்கு அனுமதி இல்லாததால் செடிகளை உரியமுறையில் பராமரிக்க முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டிகே.ஜக்கையன், கேரள ஏலக்காய் விவசாயிகள் தொழிற்சங்கசங்க செயலாளர் சதாசிவ சுப்ரமணியன், செயற்குழுஉறுப்பினர் நாராயணன் ஆகியோர் இன்று தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக் கொடுத்தனர்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கரோனாவிற்கு முன்பு இங்கு விவசாயிகள் இடுக்கி மாவட்டத்திற்கு சென்று தோட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது ஊரடங்கினால் அனுமதி மறுக்கப்படுகிறது. அங்குள்ள தொழிலாளர்களும் திரும்பி வர முடியாத நிலை உள்ளது. எனவே சிறு, குறுவிவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்குச் சென்று பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செயலாளர் சதாசிவ சுப்ரமணியன் கூறுகையில், ஏலச்செடிகளைப் பொறுத்தளவில் தொடர்பராமரிப்பு என்பது அவசியம். உரம், களைஎடுப்பு, மருந்து தெளித்தல், கவாத்து செய்தல் என்று கண்காணிப்பு நிலையிலே இருக்க வேண்டும். தற்போது 40நாட்களுக்கு மேலாக செடிகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் மழைஇன்மை, வெள்ளம் போன்ற காரணத்தினால் ஏலவிளைச்சல் வெகுவாய் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஊரடங்களினால் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது. இது குறித்து இடுக்கி ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளோம். தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தோட்டப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT