மத்திய மாநில அரசுகள் தன்னிச்சையாக வரி விதிப்பதைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் அறிக்கை:
ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு பெரிய அளவில் பொருளாதார இழப்பினை சந்தித்துள்ளன.
இந்த பாதிப்பிலிருந்து தப்புவது மிகப்பெரிய சவாலானது. மிகக்கடினமான சூழலில் சிக்கியுள்ள வணிக நிறுவனங்கள் ஊரடங்கிற்குப் பின் மேலும் சிக்கலை சந்திக்க உள்ளன. இந்நிலையில், பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாக அதிகரித்து, விலை 20 வருட சரிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.20 குறைக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
பேரல் எண்ணெய் 70 டாலருக்கு விற்கப்படும்போது நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே, பேரல் 30 டாலராக குறைந்தபோதும் நீடிக்கிறது.
தற்போது பெட்ரோல், டீசல் மீது கலால் வரி மற்றும் கூடுதல் சாலை வரியை விதித்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி முறையே ரூ.3.25, ரூ.2.50 என உயர்த்தப்பட்டது.
தற்போதைய சூழலில் மக்களால் இதை தாங்க முடியாது. தொழில், வணிகமும் மிகவும் பாதிக்கும். எனவே, கலால் வரி உயர்வை கைவிட்டு, உடனே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரபட்டுள்ள நிலையில், அதில் பெட்ரோல், டீசலையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.