இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலியால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உடல் நலம் குன்றிய தாயை கவனிப்பதற்காக, சைக்கிளில் 120 கி.மீ., பயணித்து ஊருக்கு வந்த கூலித்தொழிலாளிக்கு ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
காரைக்குடி அருகே எஸ்.ஆர்.பட்டணத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (50). கூலித்தொழிலாளியான அவர் பிழைப்புக்காக மனைவி, மகன், மகள், தாயார் வள்ளியம்மாள் (70) ஆகியோருடன் திருச்சியில் குடியேறினார். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வள்ளியம்மாளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு, நடமாட முடியாமல் முடங்கினார்.
இதையடுத்து தாயை கவனிக்கும் பொருட்டு மனைவி, குழந்தைகளை திருச்சிலேயே விட்டுவிட்டு, சொந்த ஊரான எஸ்.ஆர்.பட்டணத்தில் தாயாருடன் மீண்டும் குடியேறினார். வருமானத்திற்காக அவர் தனியார் அச்சகத்தில் ரூ.300 தினக்கூலியில் வேலைக்கு சேர்ந்ததுடன், காலை, மாலை தாயாருக்கு பணிவிடையும் செய்து வந்துள்ளார்.
வாரத்தில் ஒரு நாள் மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக திருச்சி சென்று விட்டு வருவார். இந்நிலையில் கரோனா தொற்றால் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், திருச்சி சென்ற கருப்பையாவால் ஊருக்கு திரும்ப முடியவில்லை.
உதவிக்கு ஆள் இல்லாததால் கருப்பையாவின் தாயார் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். தாயார் படும் அவஸ்தையை அக்கம், பக்கத்தினர் மூலம் கருப்பையா தெரிந்து கொண்டார். போக்குவரத்து வசதி தொடங்காத நிலையில், மோட்டார் சைக்கிளும் இல்லாததால் தாயை கண்பதற்காக சைக்கிளிலில் 120 கி.மீ., பயணித்து ஊருக்கு வந்தார்.
மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் கருப்பையா குடும்பத்திற்கு எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இந்து தமிழ் ஆன்லைனில் நேற்று (மே 10) செய்தி வெளியான நிலையில், கருப்பையாவிற்கு நிவாரண உதவி வழங்க ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
இதையடுத்து காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, கருப்பையா வீட்டிற்கு நேரில் சென்று அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.