பொதுமுடக்கம் அமலாகி 50 நாட்கள் ஆகப் போகின்றன. வீட்டிலிருந்தபடியே பணி செய்தாலும், வேலையற்று சும்மா இருந்தாலும் பணியாளர்களுக்கான ஊதியத்தை அந்தந்த நிறுவனங்களே வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிவிட்டாலும் பல்வேறு கம்பெனிகள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றன.
இதனால் ஊதிய வெட்டு, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தம்மிடம் உள்ள தொழிலாளர்களுக்கான ஊதியத்தை இஎஸ்ஐ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது கோவை மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர் சங்கம். இது தொடர்பாக இந்த சங்கம் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “கரோனா நோய்ப் பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் அனைத்துவகையான தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்ட நிலையில் கடும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் உருவாகியுள்ளன.
இதனால் தொழில் நிறுவனங்கள் சகஜ நிலைக்குத் திரும்பக் கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. தொழில் நிறுவனங்கள் இயங்காததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தொழிலாளர்களின் ஊதியத்தை தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் (இஎஸ்ஐ) வழங்க முன்வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
இப்படிச் செய்வதன் மூலம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதையும் தொழிலாளர்கள் ஊதியமின்றித் தவிப்பதையும் தவிர்க்க முடியும். இஎஸ்ஐ நிர்வாகம் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவை உடனடியாக எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் தொழில் நிறுவனங்கள் முன்னேற்றத்தை எட்டவும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இஎஸ்ஐ நிர்வாகம் நல்ல முடிவை எடுக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்றனர்.