தமிழக அரசை வெளிப்படையாகக் கண்டிக்க இயலாதது ஏன் என்று ரஜினிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில், சென்னையைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடையைத் திறந்து தமிழக அரசு. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மே 14-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது தமிழக அரசு. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், ரஜினி தனது ட்விட்டர் பதிவில், "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்" என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த விமர்சனம் பெரும் விவாதமாக மாறியது.
ரஜினியின் இந்தப் பதிவு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்தின் கருத்து விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. முழு அடைப்பின்போது மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசை அவரால் வெளிப்படையாகக் கண்டிக்க இயலவில்லையே ஏன்? மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன?"
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.