கோடை விடுமுறையில் சைக்கிள் வாங்கி ஓட்டுவதற்காக தங்கள் பெற்றோரிடமிருந்து பெற்று சிறுகச் சிறுக உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை ஏழைகள் பசியாற வழங்கிய சிறுமிகளை அப்பகுதி மக்கள் பாராட்டிவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்த மனோதீபன், அருணா தம்பதிகளின் குழந்தைகள் வான்மதி (10), குருநிலா(7).
சிறுமிகள் இருவரும் கோடை விடுமுறையைக் கழிக்க சைக்கிள் வாங்க வேண்டும் என கடந்த ஐந்து மாதங்களாக பெற்றோர் கொடுக்கும் தொகையை சிறுகச் சிறுக உண்டியலில் சேமித்து வந்தனர்.
ஆனால், கரோனா ஊரடங்கால் பள்ளி விடுமுறையில் இருந்தும் வெளியில் செல்ல முடியாத நிலை சிறுமிகளுக்கு ஏற்பட்டது. இதனால் சைக்கிள் வாங்கும் திட்டம் தள்ளிப்போனது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமப்படுவதை தொலைக்காட்சியில் கண்டுவந்துள்ளனர் சிறுமிகள். மேலும் அவர்களுக்கு பலர் உதவுவதையும், ஏழைகளின் பசியாற்றுவதையும் பார்த்துள்ளனர்.
இதனால் தாங்கள் சேமித்த பணத்தைக் கொண்டு யாருக்காவது உதவ வேண்டும் என தாய் அருணாவிடம் கூறியுள்ளனர். தாங்கள் உண்டியல் சேமித்த பணத்தை எடுத்தனர். அதில் 8 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.
அந்தத் தொகையில் வத்தலகுண்டு புதுப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் சிரமத்தைப் போக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை பெற்றோர் உதவியுடன் சிறுமிகள் வான்மதி, குருநிலா ஆகியோர் வாங்கிக் கொடுத்தனர்.
சிறுமிகளின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.