மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று அவர் விரைவில் முழு உடல்நலன் பெறுவார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 87) திடீர் நெஞ்சுவலி காரணாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “மன்மோகன் சிங்கிற்கு இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இரவு 8.45 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் உடல்நிலையை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தன.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவர் விரைவாக உடல்நலம் தேற வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன்.
இதுபோன்ற நேரத்தில், டாக்டர். மன்மோகன் சிங்கின் சேவை நமது நாட்டுக்குத் தேவை. அவர் விரைவில் முழு உடல்நலன் பெறுவார் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.