வட மாநில வியாபாரிகளை நம்பியே இயங்கி வரும் வெள்ளிக் கொலுசுத் தொழில் ஊரடங்கு காரணமாக முடங்கிவிட்டது. இதனால், சேலத்தில் 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1.50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, பொன்னம்மாபேட்டை, குகை, இளம்பிள்ளை உள்ளிட்ட 60 இடங்களில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
நல்ல வரவேற்பு
சேலத்தில் உற்பத்தியாகும் வெள்ளிக் கொலுசுகள் பளபளப்பாகவும், அழகுற காண்போரின் கண்களை கவரும் வடிவமைப்பில் உள்ளதால், நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் ரகம், வடிமைப்புக்கு ஏற்ற வகையில் கிலோவுக்கு ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை கூலியாக பெற்று வருகின்றனர். சேலம் மாவட்ட உற்பத்தியாளர்கள் கலைநயத்துடன் வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு ஆகியவற்றை வடிவமைத்து கொடுக்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தில் உள்ள தங்க, வெள்ளி நகைக் கடைக்காரர்கள், சேலம் வெள்ளி செயின் உற்பத்தியாளர்களிடம் வெள்ளியைக் கொடுத்து, அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறாக வாங்கிக் கொள்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு...
சேலத்தில் இருந்து சராசரியாக 50 டன் அளவுக்கு வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளியிலான பொருட்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், நகைக்கடைகள் மூடப்பட்டும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, வெள்ளிக் கொலுசு தேவை குறைந்துவிட்டது.
சேலம் மாவட்டத்தில் 1.50 லட்சம் குடும்பத்தினர் வெள்ளிக் கொலுசு தயாரிப்பு பணியில்லாமல் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வட மாநில ரயில் போக்குவரத்தும், உள்ளூர் பேருந்து போக்குவரத்தும் மீண்டும் தொடங்கினால், மட்டுமே வெள்ளித் தொழில் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
அரசு கவனிக்குமா?
இதுகுறித்து சேலம் மாவட்ட வெள்ளி செயின் (கொலுசு) உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஜெகதீஸ் கூறும்போது, “வட மாநில வியாபாரிகளை நம்பியே சேலத்தில் வெள்ளித் தொழில் இயங்கி வருகிறது. தற்போது, பேருந்து, ரயில் இயக்கம் முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், வெள்ளித் தொழில் முடங்கி, தொழிலாளர்கள் குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, வெள்ளித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என்றார்.