திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் காய்கறி விற்பனை இன்று தொடங்குகிறது.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைகோள் நகரப் பகுதியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகள் அமைக்கும் பணிகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமையன்று நேரில் ஆய்வு செய்தனர்.
முன்னதாக 200 மொத்த வியாபாரிகளுக்கு, குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த சந்தையில் இன்று (திங்கள்கிழமை) காய்கறி விற்பனை தொடங்குகிறது.
இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை, மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் நேற்று கூறியதாவது:மொத்த வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதற்கான வசதிகளை இந்த தற்காலிக சந்தையில் அரசு செய்துக் கொடுத்துள்ளது. காய்கறி லோடுகள் அனைத்தும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இன்று இரவு அவை திருமழிசையை வந்தடையும்.
திங்கள்கிழமை காலை முதல் விற்பனையை தொடங்குகிறோம். கோயம்பேடு சந்தையில் சுமார் 1,800 காய்கறி கடைகள் உள்ளன. இதில் 200 வியாபாரிகளுக்கு மட்டுமே திருமழிசையில் கடைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 1,600 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காய்கறி விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.