பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி: ஆரஞ்சிலிருந்து சிவப்பு மண்டலத்துக்கு மாறுகிறது நெல்லை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலத்துக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரையில் 72 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 58 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த 83 முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மாவட்டத்தில் வள்ளியூர் சித்தூர் பகுதியை சேர்ந்த 7 பேர், திருநெல்வேலி அருகே நடுக்கல்லூரை சேர்ந்த ஒருவர் என்று புதிதாக மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆனது.

இந்நிலையில், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர், கீழகழுவூரை சேர்ந்த ஒருவர் என்று மேலும் இருவருக்கு இன்று (மே 10) நோய் தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆகியுள்ளது.

20-க்கும் மேற்பட்ட நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சையில் இருந்தால் அப்பகுதி சிவப்பு மண்டலமாக மாறும். அந்தவகையில் தற்போது ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் திருநெல்வேலி மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாறும் நிலை உருவாகியிருக்கிறது.

SCROLL FOR NEXT