தமிழகம்

கடல் அரிப்பைத் தடுக்க ரூ.886 கோடியில் திட்டம்: பசுமை தீர்ப்பாயத்தில் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பதில்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடல் அரிப்பைத் தடுக்க ரூ.886 கோடியில் திட்டம் தயா ரிக்கப்பட்டிருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந் திய 2-ம் அமர்வில் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆசி பெர்னாண்டஸ், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் உள்ளிட்ட இந்திய கிழக்கு கடலோரப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் அறிவியல் பூர்வ மாக இல்லை. கடல் அரிப்பை தடுப் பதற்கான சரியான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த அமர்வு, கடலோர மேலாண்மை குறித்த செயல்திட்டத்தை தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் வகுத்து அது தொடர்பான அறிக்கையை அமர்வின் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந் தது. இதுவரை தமிழக அரசு சார்பில் செயல் திட்டம் வகுக்கப்படாத நிலையில், ஆணையத்தின் உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, 2-ம் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இம்மனு, 2-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு கட லோர மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் எச்.மல்லேசப்பா நேரில் ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய் தார். அதில் கூறியிருப்பதாவது:

கடல் அரிப்பை தடுக்கும் பணியில் பொதுப்பணித்துறை முக்கியப் பங்காற்றுகிறது. கடல் அரிப்பைத் தடுப்பதற்கான கடலோர மேலாண்மை செயல் திட்டம் ஒன்றை வகுக்கும்படி ஆணையம் சார்பில் அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, பொதுப்பணித் துறை திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 1,076 கி.மீ. நீள கடலோரப் பகுதி உள்ளது. அதில் 13 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு கடல் அரிப்பு அதிகமாக உள்ள 100 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் பனை மரங்களை நடுவது, கற்களைக் கொட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ள ரூ.886 கோடியே 82 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பின்னர், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், பொதுப்பணித் துறையுடன் இணைந்து முறையான கடலோர மேலாண்மை செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். அதன் முன்னேற்றம் குறித்து அடுத்த விசாரணையின்போது விரிவான திட்ட அறிக்கையை அமர்வின் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT