பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கரோனாவிலிருந்து பாதுகாக்க தெளிக்கப்பட்ட கிருமி நாசினி: குறைந்ததா கொசுத்தொல்லை ?

ந.முருகவேல்

கோடை வந்துவிட்டாலே பகலில் வெயில் ஒருபுறம் வாட்டிவதைக்க, வெயில் தணிந்து மாலை ஆறரை மணிக்கு நிம்மதி பெருமூச்சு விடும் வேளையில், கொசு ரீங்காரம் தொடங்கி, படாதபாடு ஏற்படுத்தும். இதனாலேயே இரவில் காற்று வாங்கக் கூட ஜன்னலை திறந்து வைப்பதற்கு பதிலாக கொசுவலை அமைத்து, மின்விசிறியை சுழல விடுவது வாடிக்கை. இது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வழக்கமான ஒரு நிகழ்வு.

இந்த நிலையில், இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக கொசுவலையின்றி, கதவை திறந்துவைத்து,கோடை காற்றை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், திரவ கொசுவிரட்டியோ, சுருள் கொசு விரட்டியோ இல்லாமல் தூங்கும் அனுபவம் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர் குடியிருப்பு வாசிகள்.

கடலூரைச் சேர்ந்த குடியிருப்புவாசி அன்பரசி கூறுகையில், "வழக்கமாக கோடை காலம் என்றதும் வெயிலைக் காட்டிலும் இரவில் கொசுவை சமாளிப்பது தான் பெரும்துயரம். ஆனால் இந்த ஆண்டு கொசுத்தொல்லை குறைந்திருக்கிறது. காற்றையும் மாசின்றி சுவாசிக்க முடிகிறது. இதற்கு முக்கியக் காரணம் தூய்மைப் பணியாளர்களின் பணி என்றால் மிகையாகாது.

நாள்தோறும் வீதிகளில் குப்பைகளை அகற்றுவதோடு, பிளீச்சிங் பவுடரும், கிருமி நாசினி திரவமும் தெளிப்பதால், சுற்றுச்சூழல் சுத்தமாவதோடு, கொசு உற்பத்தியும் குறைந்திருப்பதாகக் கருதுகிறேன். எனவே தான் கொசு தொல்லையின்றி நிம்மதியாக தூங்க முடிகிறது. கரோனா துயரம் என்பதைக் காட்டிலும் தூய்மையைக் கற்றுக் கொடுத்திருக்கிறது" என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடியிடம் கேட்டபோது, "கரோனாவுக்கு தெளிக்கப்படும் கிருமி நாசினிகளால் கொசு உற்பத்தி குறைந்திருப்பது உண்மை தான். மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வெளியே சென்று வந்தால் கை கழுவுவது, முகக்கவசம் பயன்படுத்துவது, தூய்மையை கடைபிடிக்கும் நிலைக்கு மாறியிருக்கிறோம்.சுற்றுச்சூழல் தூய்மையும், காற்றில் மாசுபாடு குறைவும் முக்கியக் காரணங்கள். மேலும், தற்போது முகக்கவசத்தை பயன்படுத்திய பின் தூர வீசுவதை தவிர்த்து, அவற்றை ஒரு பையில் வைத்து, 3 நாள்களுக்குப் பின் எரித்து விடவேண்டும்" என்றார்

தொடர்ந்து கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் செயலாளர் மருதவாணன், "கொசு குறைந்திருக்கலாம், ஆனால் அவற்றின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படவில்லை. கழிவு நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளோம். அதை செய்யவில்லை. அதையும் செய்தால் கொசுவை அறவே ஒழித்துவிடலாம். மேலும், ஊரகப் பகுதிகளில் கழிவுநீர் அகற்று தேக்கங்களை முறையாக மூடவேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT