வாட்ஸ் அப் குரூப்பில் தனது கடை குறித்த விளம்பரத்தில் குறிப்பிட்ட மதத்தினரை அவதூறு செய்யும் விதத்தில் பதிவு செய்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, தி.நகர், மகாலட்சுமி தெருவில் வசிப்பவர் பிரசாந்த்(32) அதே முகவரியில் பேக்கரி நடத்தி வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனிலும் பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
பிரசாந்த் இதற்காக வாட்சப் குரூப் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தனது பேக்கரி குறித்து விளம்பரம் செய்துள்ளார். தனது பேக்கரியின் அருமை பெருமைகளை குறிப்பிடிருந்த அவர் குறிப்பிட்ட மதத்தினர் தனது பேக்கரியில் வேலை செய்யவில்லை என குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்.
இவ் விளம்பரத்தில் குறிப்பிட்ட மதத்தினரைப் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பை பார்த்த பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில்,மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை நேற்று கைது செய்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரோனா கண்டவர்களுக்கும் வரும், சமுதாய விலகல், முகக்கவசம், முன்னெச்சரிக்கை மட்டுமே காக்கும் இவைகளை கடைபிடிக்காத யாராக இருந்தாலும் வரும் என்கிற எண்ணம் இல்லாமல் இதுபோன்ற ஒரே வகையான பிரச்சாரத்தை செய்பவர்கள் சட்டத்தின்முன் குற்றவாளியாக நிற்க வேண்டிய நிலை வரும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.