லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முருகன், கடந்த அக்.11-ம் தேதி பெங்களூரூ 11-வது சிவில் சிட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரது சகோதரி கனகவள்ளி (57), இவரது மகன் சுரேஷ், திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் (35) ஆகியோரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக முருகனை கடந்த நவ.26-ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் நவ.27–ம் தேதி முதல் 7 நாட்கள் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபின், மீண்டும் பெங்களூரு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்து 162 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், போலீஸார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, முருகனுக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் ஹரிபாஸ்கர் ஆன்லைன் மூலம் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி பி.குமார் இன்று (மே 9) உத்தரவிட்டார்.
இதுகுறித்து முருகன் தரப்பு வழக்கறிஞர் ஹரிபாஸ்கர் கூறும்போது, "பெங்களூரு சிறையில் உள்ள முருகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக, அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
முக்கியமான லலிதா ஜூவல்லரி வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். பாலக்கரை மற்றும் சென்னையிலுள்ள 15 வழக்குகளில் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம்" என்றார்.