தமிழகம்

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய ஆர்வத்தை கோவிட் நோய் தடுப்புப் பணியில் காட்டவில்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது , வழக்குப் போட்டிருப்பதை முத்தரசன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான விற்பனையில் காட்டிய ஆர்வத்தை, கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் காட்டவில்லை. மதுக்கடைகள் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என இடித்துரைத்த சென்னை உயர் நீதிமன்றம் நாளை முதல் வரும் மே 17 ஆம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றுபட்டு எழுப்பிய குரலில் உள்ள நியாயத்தை உயர் நீதிமன்றம் உத்தரவு பிரதிபலித்துள்ளது. ஆனாலும் ‘ஆன் லைனில்’ மதுபானங்கள் விற்பனை செய்யலாம் என அரசுக்கு யோசனை கூறியிருப்பது மதுவிலக்கு கொள்கைக்கு எதிரானதாகும்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் பரிபூரண மதுவிலக்கு கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.

கடந்த 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றுள்ளனர்.

இதில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் மீறப்படவில்லை. இருப்பினும் அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளை முடக்கும் நோக்கத்துடன் அவர் மீது வழக்குப் போட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளின்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி உட்பட பலர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT