தமிழகம்

எங்கும் வருவோம் உமைத் தடுக்க: தமிழக அரசு மீது கமல் காட்டம்

செய்திப்பிரிவு

எங்கும் வருவோம் உமைத் தடுக்க என்று தமிழக அரசின் செயல் குறித்து கமல் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காலகட்டத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தமிழக அரசு. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாஸ்மாக் திறப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரியும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மௌரியா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று (மே 9) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படக்கூடாது. ஆன்லைன் மூலம் விற்று டோர் டெலிவரி செய்யலாம். டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை மே.14-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக அரசின் மேல்முறையீடு தொடர்பாக கமல் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ்ப் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT