குறும்பனை பெர்லின். 
தமிழகம்

கரோனா பரவலைத் தடுக்க மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பதே சிறந்த வழி!- நெய்தல் மக்கள் இயக்கம் சொல்லும் யோசனை

என்.சுவாமிநாதன்

தனிமனித விலகலை உறுதி செய்ய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறது. இந்தநிலையில், மீனவ கிராமங்களில் தனிமனித விலகலை உறுதிசெய்ய அவர்களைத் தொழிலுக்கு அனுப்புவதே சிறந்தவழி என ஆலோசனை சொல்கிறது நெய்தல் மக்கள் இயக்கம்.

இவ்வமைப்பின் குமரி மாவட்ட செயலாளரும், எழுத்தாளருமான குறும்பனை பெர்லின் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், “மக்கள் நெருக்கம் இந்திய அளவில் சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 900 மக்கள் என்று இருக்கிறது. ஆனால், கடலுக்கும் கடற்கரை சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் கடலோர மக்களின் இந்த சராசரியோ 4,500 என்ற அளவில் இருக்கிறது. அப்படி நெருக்கமாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் ஒருவருக்கு தொற்று வந்துவிட்டாலே அம்மக்களின் சங்கிலித்தொடர் வாழ்க்கை முறையால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும்.

மத்திய அரசு பொது முடக்கத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்கு தளர்வு அறிவித்தபோதும் தமிழக அரசு, மீன் வளத்துறை, காவல்துறை ஆகியோர் அதற்கு பல்வேறு நிபந்தனைகளைப் போடுகிறார்கள். குறிப்பாக, விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது, பாரம்பரிய கட்டுமர, நாட்டுப்படகுகளில் ஒரு படகுக்கு மூன்று பேருக்கு மிகாமல் வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டும் காலை 10 மணிக்குள் முடிக்கும் விதத்தில் தொழில் செய்யவேண்டும் என்று விதிமுறைகளைச் சுமத்தியிருக்கிறார்கள்.

கடல் இயற்கையாகவே ஒருசிறந்த கிருமிநாசினி. கடற்கரையில் வந்து நின்று அந்த உப்புக்காற்றுடன் வரும் சாரலை வாங்கினாலே பலமுறை உடல்முழுக்க கிருமிநாசினி தெளிப்பதைவிட அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கடல் தண்ணீரை எடுத்து வாய்கொப்பளித்து முகம் கழுவினாலே பலமுறை சோப்புத் தண்ணீரால் கை, முகம் கழுவுவதைவிட அதிக பலன் தரும்.

விவசாயம் செய்ய ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தியபோதும் கடல் விவசாயம் செய்ய மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. மற்ற எந்தத் தொழில்களைவிடவும் கடல் தொழில் செய்யும் மீனவர்கள் இயற்கையாகவே தனிமனித விலகலைக் கடைப்பிடிப்பார்கள். 80 அடி விசைப்படகில் 10 முதல் 15 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். அவர்கள் எப்போதுமே ஒருவரை ஒருவர் உரசவோ இடிக்கவோ வாய்ப்பே வராது. 10 முதல் 12 மீட்டர் நீள நாட்டுப்படகில் 5 அல்லது 6 பேர் மீன்பிடிக்கச் சென்றால் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியாவது அவர்களுக்கு இருக்கும். 5 அல்லது 6 மீட்டர் நீளமுள்ள கட்டுமரத்தில் 2 அல்லது 3 பேர் மீன்பிடிக்கச் சென்றால் எத்தனை மீட்டர் இடைவெளியில் இருப்பார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கரையிலிருந்து இழுக்கப்படும் கரைமடி தொழிலில்கூட இயற்கையாகவே ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும். அப்படி இடைவெளி இல்லையென்றால் அடுத்தவர் கால்தட்டி விழுந்துவிடும் நிலை ஏற்படும். அதனால் அளந்துவிட்டதுபோல் ஒருவரை அடுத்து ஒருமீட்டர் இடைவெளிக்குப் பிறகுதான் மற்றவர் நிற்கமுடியும். அப்படி, அனைத்துவகை மீன்பிடிப்பிலும் தனிமனித விலகலை இயற்கையாகவே கடைப்பிடிக்கும் மீனவர்களைச் சுதந்திரமாக மீன்பிடிக்க விடாமல் தடுப்பது, மீனவர்களின் தொழில்முறைகளைப் பற்றிய புரிதல் இல்லாததுதான்.

மீன் பிடித்துக் கரையில் கொண்டுவந்து விற்பனை செய்யும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதில் சிரமம் இருக்கலாம். அதற்கும் குறும்பனை, குளச்சல் போன்ற இடங்களில் மீன்விற்பனையை தனிமனித இடைவெளியுடன் செய்ய கமிட்டி அமைத்து காவல் துறைக்கு நெருக்கடி கொடுக்காமல் சிறப்பாகச் செய்கிறார்கள். அப்படி இருந்தும் தமிழக அரசும் மீன்வளத்துறையும் எதற்காக மீனவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றன?

விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றால் திரும்பிவர எட்டு முதல் பத்து நாள்கள் வரை ஆகும். தூண்டிலில் சுறாமீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீன்பிடித்துத் திரும்பிவர குறைந்தது 25 முதல் 30 நாள்கள் ஆகும். அதற்குள் பொதுமுடக்கமே முற்றிலுமாக விலக்கப்பட்டிருக்கும். அதன்பின் மீன் விற்பனை செய்ய எந்த நெருக்கடியும் இருக்காது.எனவே, விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், கட்டுமரங்கள், கரைமடிகள் என்று எல்லா மீன்பிடித் தொழில்களையும் சார்ந்த மீனவர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி மீன்பிடிக்க கடலுக்குள் அனுப்புவதே கடலோர கிராமங்களில் கரோனா பரவலைத் தடுக்க சிறந்தவழி” என்றார் குறும்பனை பெர்லின்.

SCROLL FOR NEXT