பழநி அருகே காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக மாணவர் அணியைச் சேர்ந்த 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா-பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சின்னகலையம்புத்தூர் காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் கொடி மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுக மாணவர் அணியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகிய 2 பேரிடம் பழநி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே பழநி வி.கே.மில்ஸ், ஆலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங் கோவன், குஷ்பு ஆகியோரது உருவ பொம்மைகளை அதிமுகவினர் தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.