கரோனா மருத்துவக் கழிவுகளை கையாளுதல், சேமித்தல், வெளியேற்றுதல் குறித்த நெறிமுறைகளை நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் உருவாக்கப்பட்டால் அதை தனியாக பிரித்து மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவுப் பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
நோய் தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முக கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணிநேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். முக கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்றப்பட வேண்டும்.
பிற கழிவுகளுடன் கரோனா நோயாளிகளின் கழிவுகளை சேர்க்கவோ, சேமிக்கவோ கூடாது. 24 மணிநேரத்துக்குமேல் கரோனா நோயாளிகளின் கழிவுகளை சேமித்துவைத்தல் கூடாது.
கரோனா நோய் அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்க கூடாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.