பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

ஜூன் மாதம் முதல் வழக்கமான முறையில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கோரிக்கை

ஆர்.பாலசரவணக்குமார்

வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஜூன் மாதம் முதல் வழக்கமான முறையில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் இன்று (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், "கரோனா ஊரடங்கு காரணமாக, நீதித்துறைப் பணிகள் நடக்காததால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த வழக்கறிஞர்களுக்காக உருவாக்கப்பட்ட நிதியத்துக்கு ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது.

இதில், பார் கவுன்சில் நிதியத்துக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஒரு கோடி ரூபாயும், பார் கவுன்சில் சார்பில் மூன்று கோடி ரூபாயும், இந்திய பார் கவுன்சில் ஒரு கோடி ரூபாயும் வழங்கியுள்ளனர்.

இந்தத் தொகையை நலிந்த வழக்கறிஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 17 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 12 ஆயிரம் வழக்கறிஞர்கள் நலிந்த வழக்கறிஞர்கள் எனக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

வரும் திங்கள்கிழமை முதல் இந்த உதவிகள் அந்தந்த மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் மூலம் வழங்கப்படும். சென்னையில் சிறப்பு கவுண்ட்டர் மூலம் வழங்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை தவிர, கீழமை நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாததால், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக ஜூன் மாதம் முதல் நீதிமன்றங்களை செயல்படச் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்க உள்ளோம்.

ஜூன் மாதம் முதல் நீதிமன்றம் செயல்படுவதாக இருந்தால், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளைப் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும், நீதிமன்றங்கள் திறக்கப்பட்டால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம்" என அமல்ராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT