சீர்காழி தாலுக்காவுக்கு உட்பட்ட சுமார் 2,300 மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோரை அடையாளம் கண்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளை வீடு தேடிப்போய் வழங்கி இருக்கிறது ‘நிலம் அறக்கட்டளை’.
சீர்காழி தாலுக்காவில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கும் எளிய மக்களுக்கு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிவாரண உதவிகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்கி வருகிறது சீர்காழியில் செயல்படும் ’நிலம் அறக்கட்டளை’ அப்படி இதுவரைக்கும் சீர்காழி தாலுக்காவுக்கு உட்பட்ட 165 ஊராட்சிகளுக்குள் வரும் 180 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி இருப்பதாகத் தெரிவிக்கும் அறக்கட்டளையின் தலைவர் கிள்ளை ரவிந்திரன், ''பொது முடக்கம் முடிவுக்கு வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நிவாரணங்கள் வழங்குவது தொய்வின்றி தொடரும்'' என அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய கிள்ளை ரவிந்திரன், “பொதுமுடக்கம் அறிவித்து மக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கே சிரமப்படுகிறார்கள் என்று தெரிந்ததுமே நாங்கள் அத்தகைய எளிய மக்களைத் தேடிப் போக ஆரம்பித்துவிட்டோம். மற்றவர்களைப் போல கூட்டம் கூட்டி ஆள் சேர்க்காமல், அரிசி, காய்கனிகள், மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு நாங்களே வீடு தேடிப் போனோம்.
ஏழைகளை தேடித் தேடிப்போய் உதவிக்கொண்டே, அன்றாடப் பிழைப்பில் இருக்கும் ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஆங்காங்கே உதவிக்கரம் நீட்டினோம். அப்படி நேற்றுவரை சீர்காழி தாலுக்காவுக்கு உட்பட்ட 164 ஊராட்சிகளுக்கு நாங்கள் போய்வந்துவிட்டோம். இன்று 165 -வது ஊராட்சிக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய இந்தப் பயணத்தின்போது ஆங்காங்கே பெரிய அளவில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளும் மனநலம் பாதித்தவர்களும் எங்கள் கண்ணில் பட்டார்கள். இவர்களுக்கும் கட்டாயம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் சீர்காழி தாலுக்காவில் அரசின் உதவிபெறுவோர் பட்டியலை எடுத்து அதிலிருக்கும் நபர்களுக்கும் வீடு தேடிப் போய் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். அப்படி நேற்று வரைக்கும் சுமார் 2,300 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதித்த மக்களுக்கு எங்களது நிவாரண உதவிகள் போய்ச் சேர்ந்திருக்கின்றன.
கடந்த 40 நாட்களில் பலதரப்பட்ட மக்களுக்கும் நாங்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறோம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சோறாக்கிப் போட்டிருக்கிறோம். எனினும் இதுவரை எந்த உதவியும் கிடைக்காமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மனநலம் பாதித்த மக்களுக்கும் உதவிட்டது தான் எங்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப் பட்டியிலில் இன்னும் உதவி தேவைப்படுவோர் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களின் இருப்பிடம் நோக்கி இதோ எங்களது வாகனம் புறப்பட்டுவிட்டது” என்று சொன்னார்.