சிவகங்கை மாவட்டத்தில் இரவில் முயலும், பகலில் மைனாவும் வெள்ளரியை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் கரோனா பாதிப்பால் வெள்ளியை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளரியை சிறியவர் முதல் பெரியோர் வரை விரும்பி உண்கின்றனர். இதனால் சிவகங்கை அருகே இடையமேலூர் பகுதியில் அதிகளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் வெள்ளரி சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரைக்கும் அனுப்பப்படுகிறது. குறைந்த செலவில் அதிக பலன் கொடுப்பதால் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நல்ல லாபம் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு வெள்ளரி விவசாயிகளுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது.
இரவு நேரங்களில் முயல்களும், பகல் நேரங்களில் மைனாவும் வெள்ளரியை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெள்ளரியை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை மிக குறைந்த விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதுகுறித்த இடையமேலூர் விவசாயி பூச்சி கூறியதாவது: வெள்ளரிக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து 40 நாட்கள் பராமரித்தாலே போதும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து காய்ப்பு இருக்கும். இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
இந்தாண்டு வெள்ளரியை முயலும், மைனாவும் சேதப்படுத்துகின்றன. மேலும் கரோனாவால் வெள்ளரியை விற்பதில் சிரமம் உள்ளது. ஒரு காயை ரூ.1-க்கு கூட வாங்க வியாபாரிகள் மறுக்கின்றனர். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்று கூறினர்.