நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது மூண்ட வன்முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கூடங்குளம் காவல் நிலையக் காவலர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 10000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பின்பு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஏப்ரல் 30-ம் தேதி கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இருப்பவர்கள் இந்த வருடாந்திர பராமரிப்புப் பணியின்போது கதிரியக்கத் தன்மை கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் மாற்றப்படும்போது தங்களது உடலுக்கு ஏதேனும் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் போதுமான அளவு தண்ணீர், குடி தண்ணீர் ,கழிப்பிட வசதிகள் இல்லாமையே காரணம் காட்டி உடனடியாக வட மாநிலத்தில் உள்ள எங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி ஒப்பந்த நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தனர்.
ஒப்பந்த நிறுவனங்கள் இதுபற்றி எதுவும் முடிவு எடுக்காத நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணுமின் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த முறை ஏற்பட்ட போராட்டம் சுமுகமாக முடித்துவைக்கப்பட்ட நிலையில் இன்றைய போராட்டத்தில் வன்முறை தலைதூக்கியுள்ளது. இதனால், கூடங்குளத்தில் பதற்றமான சூழலே நிலவுகிறது.