தமிழகம்

தோல்வி விரக்தி: 104 சேவைக்கு அழைப்புகள் குவிந்தன

செய்திப்பிரிவு

பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனக் கஷ்டத்தில் இருப்பதாக கூறி ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் 104 சேவை மையத்தினை தொடர்பு கொண்டனர்.

மருத்துவம் தொடர்பான தகவல்கள், மனநலம், முதல் உதவி போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காக 104 சேவை மையத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்த மருத்துவ உதவி சேவை மையத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை கேட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை என்ற புகார்களும் இந்த எண்ணுக்கு வருகிறது.

இந்நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. மதிப்பெண் குறைவாக இருப்பதால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் 104 சேவை மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை கேட்டனர்.

தேர்வு முடிவு வெளியானது முதல் மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சேவையை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை கேட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT