மதுரை மீனாட்சிபுரம் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து குலமங்கலம் சாலையில் மறியல் செய்த பெண்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் 2-வது நாளாக பெண்கள் போராட்டம்: தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீஸார்

செய்திப்பிரிவு

மதுரையில் டாஸ்மாக் கடையைத் திறக்கவிடாமல் 2-வது நாளாக பெண்கள், பொதுமக்கள் போராட் டம் நடத்தினர்.

தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் மதுக் கடைகள் திறக்கப் பட்டன. மதுரை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இதில், கரோனா தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர, மீதமுள்ள இடங்களில் உள்ள 220 கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், செல்லூர் மீனாட்சிபுரம் பகுதி மதுக் கடையை ஊழியர்கள் திறக்க வந்தபோது, அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி கடையை மூடச் செய்தனர். மீண்டும் நேற்று அந்தக் கடையை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி பாலு என்பவர் தலைமையில் அப்பகுதி பெண்கள், கடை முன் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது. இதைக் கண் டித்து குலமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மார்க்சிஸ்ட் நிர்வாகி பாலு உட்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT