கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தன் உயிரை யும் பொருட்படுத்தாமல் சேவைபுரிந்து வருகிறார்கள் அரசு மருத்துவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் வகையில் மலர்தூவி மரியாதை செலுத்தியது இந்திய ராணுவம். அதேநேரம், இந்தச் சூழலிலும்கூட தங்களதுகோரிக்கையின் நியாயத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளவில்லையே என மனம் குமுறுகின்றனர் அரசு மருத்துவர்கள்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்புபோராட்டம் நடத்திய மருத்துவர்களை இடமாற்றம் செய்தது தமிழகஅரசு. நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை சாதாரண மருத்துவமனைகளுக்கு மாற்றியதன் மூலம்,தற்போதைய இக்கட்டான சூழலில்தங்களின் சேவை பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருத்துவர்கள்வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி பெருமாள்பிள்ளை ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியது:
ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட 4 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தோம்.
அரசு செவிசாய்க்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அச்சமயத்தில், முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் அரசுமுறை பயணமாக லண்டன் செல்ல இருந்ததால் உடனே பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களின் கோரிக்கைகளை 4 வாரங்களில் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுத்தார்கள். அதை நம்பி போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் சொன்னபடி நிறைவேற்றவில்லை.
வாக்குறுதியை அரசு நிறைவேற்றாததால் அக்.25-ம் தேதி வேலைநிறுத்தம் செய்ததோடு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினோம். அப்போது அரசு தரப்பில், ‘‘மருத்துவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றால் தாயுள்ளத்தோடு அரசு பரிசீலிக்கும்’’ என்று சொல்லி பணிக்குத் திரும்பச் சொன்னார்கள். இரண்டாவது முறையாக அரசை நம்பி பணிக்குத் திரும்பினோம்.
மாநிலம் முழுவதும் 18 ஆயிரம்அரசு மருத்துவர்கள் இருக்கிறோம். அதில் 15 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசேசொன்னது. ஆனால் 30 பெண் மருத்துவர்கள் உட்பட 120 மருத்துவர்களை சில மாதங்களுக்குமுன் பணியிடமாற்றம் செய்ததோடு, தமிழக அரசு ஊழியர்கள் நடத்தைவிதி 17-பியும் எங்கள் மீது பாய்ந்தது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த,அதிக அளவில் நோயாளிகள் வரும்அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த சிறப்பு மருத்துவர்கள் 120பேரையும், சாதாரண மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளனர்.
உயர்தர சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவம் பெற்றிருந்தும், அத்தகைய சிகிச்சை அளிக்கும் வசதிகளே இல்லாத மருத்துவமனைகளில் அடைபட்டுக் கிடக்கிறோம்.
தற்போது கரோனா சிகிச்சைஅளிப்பதற்காக புதிதாக 530 மருத்துவர்களை பணியமர்த்தும் அரசுக்கு, இந்த 120 மருத்துவர்களைப் பற்றிய புரிதல் வராதது ஏன்? நீதிமன்றமே தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றச் சொன்ன பிறகும் அரசு செவி சாய்க்காதது ஏன்?
மருத்துவர்களின் அளப்பரிய பணிக்கு மத்திய அரசு உரிய மரியாதை கொடுக்கும் நிலையில், தமிழக அரசும் எங்களின் 4 அம்சகோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். நிபுணத்துவம் பெற்ற எங்களின் பணியிடமாறுதலை ரத்துசெய்து ஏற்கெனவே பணியாற்றிய மருத்துவமனைகளில் பணிசெய்ய உத்தரவிடுவதன் மூலம் கரோனா ஒழிப்பில் எங்கள் பங்களிப்பையும் சிறப்பாக செயல்படுத்தமுடியும். இந்தநிலையிலும்கூட அரசின் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.