திருமழிசை தற்காலிக சந்தையில் கரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளியை வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் பின்பற்றாததால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களையும், தன்னார்வலர்களையும் பயன்படுத்த உத்தரவிட கோரி கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் நலச் சங்க துணை தலைவர் ஜெயசீலன் தாக்கல் செய்த மனுவில் அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சங்கத்தின் சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கூடுதல் மனுவில், கரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு இருந்ததால் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்பில் இருந்த 7500 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். கோயம்பேடு சந்தை முழுவதும் மூடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டு சந்தையைச் சேர்ந்தவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதா என்பது தெரியாத நிலையில், திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு மாற்றுவதால் தொற்று இருந்தால் பரவ வாய்ப்புள்ளது.
அதனால் வியாபாரிகளுக்கு முழுமையான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் திருமழிசையில் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும். எனவே கோயம்பேடு சந்தையைச் சேர்ந்தவர்களிடம் அதிக அளவிலான பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களில் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, திருமழிசை தற்காலிக சந்தையில் கரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுரேஷ் சக்திமுருகன், அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள்.