தமிழகம்

மது விற்பனைக்கு சல்யூட்; புத்தக விற்பனைக்குப் பூட்டு!- இது சங்கம் வளர்த்த மதுரையின் அவலம்

கே.கே.மகேஷ்

முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களைத் தவிர அனைத்துத் தனிக்கடைகளையும் திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துவிட்டது. இதனால் மதுரையில் செருப்புக் கடைகள் தொடங்கி நகைக்கடைகள் வரையில் திறக்கப்பட்டுவிட்டன. ஏசி பயன்பாடுள்ள பெரிய நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளும் மட்டுமே மூடியிருக்கின்றன. இதனால் கிட்டத்தட்ட மதுரை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது.

தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக மதுரை மண்டலத்தில் ரூ.46.78 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால், மதுரையில் புத்தகக் கடைகள் திறக்க அனுமதியில்லை. ஊரடங்கு நேரம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் என்று புத்தக ஆர்வலர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், நேரம் இருக்கிறது ஆனால் புத்தகமில்லையே? என்று அவர்களே டிவிக்கும், திறன்பேசிக்கும் முகம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று புத்தக விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் அதன் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், நிர்வாகிகள் 'ஜெயம் புக் சென்டர்' ஆர்.ராஜ் ஆனந்த், 'மல்லிகை புக் சென்டர்' சுரேஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர்.

அதன் விவரம்:

''மதுரை மாநகராட்சிப் பகுதியில் புத்தக விற்பனை நிலையங்கள் திறக்கக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. சென்னையிலேயே சில புத்தகக் கடைகள் இயங்குகின்றன. பள்ளி - கல்லூரி மாணவர்களும், நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோரும் புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். கூடவே, பொதுவான நூல்களின் வாசகர்களும் சிரமப்படுகிறார்கள்.

இன்னொரு புறம் நாங்களும் ஒன்றரை மாதமாக வியாபாரம் இல்லாவிட்டாலும் வாடகை, ஊதியர் சம்பளம், மின் கட்டணம் போன்றவற்றைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, தயவுகூர்ந்து புத்தகக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். புத்தகக் கடையில் பெரும் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படியே இருந்தாலும், கடையில் முழு அளவில் தனிமனித விலகலைக் கடைப்பிடித்து புத்தக விற்பனையைச் செய்வோம் என்று உறுப்பினர்கள் அனைவரும் உறுதியளிக்கிறோம்.''

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT