ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு மூடவைத்தனர்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, டாஸ்மாக் கடைகளையும் அரசு மூடியது. இதனால், கடைகள் மூடப்பட்ட பிறகு, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம் கூடுதல் விலை கொடுத்து மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் மது கிடைக்காமல், சாராயம் காய்ச்சும் வேலையிலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (மே 7) தடுப்புக் கட்டைகள், டோக்கன், ஆதார் எண், வயது அடிப்படை என பல நிபந்தனைகளுடன் கடைகளைத் திறந்தது.
இதில், அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் நூற்றுக்கணக்கானோர் மது வாங்க வரிசையில் நின்றதைக் கண்ட பெண்கள் கோபமுற்றனர்.
இதே நிலை நீடித்தால், தினமும் நமது ஊரில் நூற்றுக்கணக்கானோர் நிற்பர். இதனால், கரோனா தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது என எண்ணிய பெண்கள் இன்று (மே 8) காலை கடையைக் குடையுடன் முற்றுகையிட்டனர். அப்போது, கடையை நிரந்தரமாக மூட வேண்டும், இங்கு மது வாங்க வருபவர்களால் கரோனா தொற்று கிராம மக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.
அங்கிருந்த தா.பழூர் போலீஸார் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், பெண்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினர். இதனையடுத்து, டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர். அதனையடுத்து, ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யும் வரை இந்தக் கடை திறக்கப்பட மாட்டாது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால், மனமகிழ்ந்த பெண்கள் அந்த இடத்தை விட்டுக் கலைந்து சென்றனர்.
இதனிடையே மதுபாட்டில்களை வாங்க வந்த பெரியவர்களும் இளைஞர்களும் கடை மூடப்பட்டதால், மனம் நொந்து அருகே எங்கு கடை உள்ளது என விசாரித்துச் சென்றனர்.