புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் அரிசி விநியோகத்தில் நீடிக்கும் குழப்பம்: மத்திய அரசு பருப்பு வழங்கியும் ஏழைகளுக்குத் தராத அவலம்

செ.ஞானபிரகாஷ்

மத்திய அரசு அரிசி, பருப்பு ஒதுக்கியும் ரேஷன் கடைகள் இல்லாததால் விநியோகத்தில் குழப்பமே நிலவுகிறது.

கரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிப்பில் உள்ளதால் அவர்களுக்கு உடனடியாக அரிசி, பருப்பு தர மத்திய அரசு உத்தரவிட்டது. புதுச்சேரிக்கு 9,425 மெட்ரிக் டன் அரிசி, 525 மெட்ரிக் டன் பருப்பு ஆகியவை வந்தன.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்காமல் மூடிக்கிடப்பதால் பல்வேறு துறையினர் மூலம் பேருந்துகளிலும், லாரிகளிலும் மூட்டைகள் எடுத்துச் சென்று வீடு, வீடாகத் தர முடிவு எடுக்கப்பட்டது. அரிசியை பேக்கிங் செய்தனர்.

20 நாட்களில் அரிசி விநியோகத்தை சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே முடித்தனர். இன்னும் பருப்பு விநியோகிக்கவில்லை. அதேபோல், ரேஷன் மூலம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகம் நடக்கும் என்று முதல்வர் அறிவித்து ஒரு வாரமாகியும் அதுவும் செயல்படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில், ஆளுநர் கிரண்பேடி, 3 மாதங்கள் மட்டுமே அரிசி தரப்படும், அதற்குப் பிறகு பணம்தான் வங்கிக் கணக்கில் தரப்படும் என்று வெளிப்படையாக தெரிவித்தார். அதனால் ரேஷன் கடைகள் இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு அமலாகி 45 நாட்களாகியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த அரிசி, பருப்பு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தராத அவலமே புதுச்சேரியில் நிலவுகிறது. ஆளுநர் ஒருபுறம், முதல்வர் தலைமையிலான அமைச்சரவை மறுபுறம், அதிகாரிகள் ஒருபுறம் என தனித்தனியாக செயல்படும் போக்கே நிலவுகிறது.

இது தொடர்பாக புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனோ வைரஸ் நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் ஏழை மக்களுக்காக, மத்திய அரசு அரிசி, பருப்பை ஒதுக்கீடு செய்தது.

குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கிவரும், நியாய விலைக் கடை ஊழியர்களைக் கொண்டு இவற்றை வழங்கவில்லை. பேக்கிங் செய்யவும் விநியோகிக்கவும் சில கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சிறிதளவும் அனுபவமில்லாத, ஆசிரியர்கள் மற்றும் பிறதுறை ஊழியர்களைக் கொண்டு, அரிசி வழங்கும் பணியினைச் செய்ததால் தொய்வு ஏற்பட்டது. காலத்தோடு மக்களுக்குச் சென்றடையவில்லை.

இலவச அரிசியைத் தொடர்ந்து, வழங்கப்படவுள்ள இலவசப் பருப்பினை விநியோகிக்க, கூடுதலாக அரசின் பற்றாக்குறை நிதியிலிருந்து செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தொகையினை, ஆண்டுக்கணக்கில் ஊதியம் இல்லாமல் வறுமையில் வாடி வரும், நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு வழங்கினால், ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களும் காலத்தோடு, மக்களைச் சென்றடையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் அவசர கால நிலையில், இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியிலிருந்து, ஆசிரியர்கள் மற்றும் பிறதுறை ஊழியர்களை விடுவித்து, அதற்கென உள்ள நியாய விலைக் கடை ஊழியர்களைக் கொண்டு வழங்கினால் மட்டுமே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள், குறித்த காலத்தில் சென்றடையும்.

பொது விநியோகத் திட்டம் என்பது, மாநில மக்களுக்கான சேவை என்பதை அரசும், ஆளுநரும் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

தற்போதுள்ள அரசின் நிலையை மாற்றி, இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடை ஊழியர்களைக் கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு ரேஷன் கடை கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், "ஊதியமே தராமல் பாதிப்பில் இருந்தோம். சிவப்பு ரேஷன் அட்டைக்கு அரிசி விநியோகம் காலதாமதமாக நடந்ததால் பல புகார்கள் வந்தன. அதனால் மஞ்சள் அட்டைக்கு உரிய இலவச அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் தருவதாகவும், 3 மாதங்கள் ஊதியம் தருவதாகவும் முதல்வர் அறிவித்தார்.

ஆனால், அதுபோல் நடக்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்வாதாரத்தையே அரசும், அதிகாரிகளும் கவலைப்படவில்லை. அதனால் எங்கள் ரேஷன் கார்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளோம்" என்றனர் மனவேதனையுடன்.

SCROLL FOR NEXT