எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மதுக் கடைகளை திறந்துவிட்டது தமிழக அரசு. இதையடுத்து தொடர்ந்து 44 நாட்களாக மதுவின் முகத்தில் விழிக்காமல் இருந்த குடிகாரர்கள் காணாததைக் கண்ட உற்சாகத்தில் முதல் நாளிலேயே கரோனா அச்சத்தை எல்லாம் கடாசிவிட்டு மதுக்கடைகளில் குவிந்தார்கள்.
இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 172.59 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று பல ஊர்களிலும் மதுப்பிரியர்களின் வருகை குறைந்து போனதால் பெரும்பாலான மதுக்கடைகள் காத்தாடிக் கிடக்கின்றன.
திருச்சி மண்டலத்தில் நேற்று 45.67 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் இன்று பல கடைகளில் மதுவைத் தேட ஆளில்லை. திருவெறும்பூரில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை வாங்குவதற்கான டோக்கன்களை வாங்கக் கூட மதுப் பிரியர்கள் வரவில்லை என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
மடை திறந்த வெள்ளமாய் நேற்று இருந்த வேகம் இன்று குறைந்ததற்கு காரணம் கையிருப்பு ரொக்கம் தீர்ந்து விட்டதுதான். அது மட்டுமில்லாமல் மீண்டும் கடை மூடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவரவரும் ‘போதிய’ அளவுக்கு வாங்கி வைத்து விட்டனர். நண்பர்கள் மூலமாகவும் மது பாட்டில்களை வாங்கி இருப்பும் வைத்து விட்டனர்.
மோகம் குறைந்ததாலும், கையிருப்பு இருப்பதாலும்தான் இன்று கடைகளில் குடிகாரர்களின் கூட்டம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.