தமிழகம்

வாழை விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம்: தாமாக வந்து உதவிய நடிகர் சசிகுமார்

கே.கே.மகேஷ்

மதுரை வரிச்சியூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். விவசாயியான இவர் இரண்டரை ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார். நாட்டு வாழை ஓராண்டு பயிர் என்பதால் கஷ்டப்பட்டு காற்று, மழை, வறட்சி எல்லாவற்றையும் தாண்டி பராமரித்து வந்தார். ஆனால், அறுவடை நேரத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டார். கடைசியில் வேறு வழியின்றி, 350 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒவ்வொரு வாழைக் குலையையும் வெறும் 50 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விற்றுவிட்டு வந்தார் அவர்.

அவரது இந்த நிலை குறித்து திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நடிகரும், இயக்குநருமான சசிகுமார், உடனடியாக கோபாலகிருஷ்ணனின் வங்கிக் கணக்கைப் பெற்று 25 ஆயிரம் ரூபாயை அதில் செலுத்தினார். இதனால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இதுபற்றிக் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "வாழையை விற்க முடியாமல் போனதும் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரை அழைத்துச் சென்று தோட்டத்தைக் காட்டினேன். அவர் மதுரை விவசாயக் கல்லூரி தோட்டக்கலைத் துறையினரைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அதிகாரியிடம் பேசியபோது, ‘உடனே தோட்டத்தையும், வாழைத் தாரையும் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கள், நான் உரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்’ என்றார். அதன்படி அந்த வீடியோவை அவர் வியாபாரிகளுக்கு அனுப்பியதோடு, தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

இதைப் பார்த்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இயக்குநர் இரா.சரவணன் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். நடிகர் சசிகுமார் உங்களுக்கு உதவ விரும்புகிறார் என்று வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றார். சொன்னபடியே சசிகுமார் 25 ஆயிரம் ரூபாயைப் போட்டுவிட்டார். ஆனால், இதுவரையில் அவர் நான்தான் பணம் போட்டேன் என்றுகூட என்னிடம் பேசவில்லை. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உதவி செய்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.

அவரும் மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் எங்கள் வேதனை புரிந்திருக்கிறது. அடுத்த முறை நல்ல விளைச்சல் ஏற்பட்டால், இந்தத் தொகையை அவரிடம் திரும்பக் கொடுத்து நன்றி கூற வேண்டும்" என்றார்.

ஏற்கெனவே கடந்த 19-ம் தேதி நடிகர் சசிகுமார், மதுரையின் முக்கிய சிக்னல்களில் போலீஸாருடன் நின்றபடி, பொது முடக்கத்துக்கு மக்கள் போலீஸாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT