தமிழகம்

தென்காசியில் மேலும் ஒருவருக்கு கரோனா: சென்னை கோயம்பேட்டில் இருந்து திரும்பிய இளைஞருக்கு தொற்று

த.அசோக் குமார்

தென்காசியில் சேர்ந்தமரத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 51 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களில், 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புளியங்குடியைச் சேர்ந்த 35 பேரில் 9 பேர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், 26 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சேர்ந்தமரத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர், சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர். கோயம்பேட்டில் கரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவரது குடும்பத்தினர் மற்றும் இவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதார துணை இயக்குநர் ராஜா கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் நன்னகரம் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ள நிலையில், புளியங்குடியில் மட்டும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்தது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT