காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. உபரி நீர் காவிரி ஆற்றில் வெளி யேற்றப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண் டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 15,128 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை இது 16,568 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91.18 அடியில் இருந்து 91.39 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்காக 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.