சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் காவல் பணியில் இருந்த போலீஸாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் காவல் ஆணையரக அலுவலக பெண் எஸ்.ஐ. ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் முன்னணிப் படைவீரர் வரிசையில் சென்னை காவல்துறை பாதுகாப்புப் பணியில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
போலீஸார் பாதுகாப்பாக இருக்க அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டபோதும் பலருக்கும் நோய்த்தொற்று பரவி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரியும் பாதிக்கப்பட்டார். பின்னர் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவரது பாதுகாவலர், ஓட்டுநருக்கு கரோனா உறுதியானது.
சென்னையில் பரவலாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. நேற்று பூக்கடை உதவி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஏற்கெனவே 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸார் நேரடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடக் கூடாது என காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
பணியிலிருந்த போலீஸாருக்குத் தொடர்ந்து கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வரும் நிலையில் போலீஸாருக்கு கரோனா தொற்று எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.
இன்று டிபி சத்திரம், கீழ்ப்பாக்கம், மாம்பலம், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் என 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவுப் பிரிவு பெண் எஸ்.ஐ. ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்வோருக்கான சான்றிதழ் அளிக்கும் பகுதியில் பணியாற்றிய பெண் எஸ்.ஐ.க்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது கணவர் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸார் எண்ணிக்கை சுமார் 60 ஆக அதிகரித்துள்ளது.