சிக்னல்களிலும் தனிமனித இடைவெளி. 
தமிழகம்

சிக்னல்களிலும் தனிமனித இடைவெளி: புதுச்சேரி போக்குவரத்து போலீஸாரின் புது முயற்சி

செ.ஞானபிரகாஷ்

சிக்னல்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் புது முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் 44 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது புதுச்சேரியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் மீண்டும் வாகனங்கள் இயக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒன்றரை மாதங்களாக இயங்காத சிக்னல்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

முன்பெல்லாம் சிக்னல்களில் இருசக்கர வாகனங்களில் வருவோர் நெருங்கி நின்று விரைந்து செல்லக் காத்திருப்பார்கள். தற்போது கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அதில் மாற்றம் செய்ய போக்குவரத்து போலீஸார் முடிவு செய்தனர்.

புதுச்சேரியில் தற்போது முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீஸார், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது தனிமனித இடைவெளி விட்டு நிற்க கட்டம் வரைவது போல் சிக்னல்களிலும் இடைவெளி விட்டு வாகனங்கள் நிறுத்தக் கோடுகள் வரைந்துள்ளனர்.

இதுகுறித்து இரு போலீஸார் நின்று வாகன ஓட்டிகளுக்கும் விளக்குகின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் கூறுகையில், "கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும், பொது இடங்களிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் தேவை என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் வருவோர் சிக்னல்களில் நிற்கும்போது முண்டியத்து இடைவெளி விடாமல் நிற்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறோம். வரிசையாக நிற்கக் கோடுகள் வரைந்துள்ளோம். அத்துடன் சாலைகளிலும் தனிமனித இடைவெளி விட்டு வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தியுள்ளோம். முகக்கவசம் அணியவும், கிருமிநாசினி பயன்படுத்தவும், கை கழுவவும் அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT