சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசுடமை ஆக்கப்பட்டதை அடுத்து அது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததால் இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவர்களில் பலர் குணமடைந்தும் வீடு திரும்பி விட்டனர்.
இந்த நிலையில், இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் போதுமான தற்காப்பு சாதனங்கள், கவச உடைகள் மற்றும் கிருமிநாசினி ஆகியவை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சரிவர வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், 8 மணிநேரம் கரோனா வார்டில் பணியாற்றிய பிறகு இதர நோயாளிகள் உள்ள வார்டில் 4 மணிநேரம் வரை பணியாற்ற வேண்டும் என்று பணியாளர்களை வற்புறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு வசதிகளை சரிவரச் செய்யாததாலும், பாதுகாப்புக் கவசங்கள் இல்லாததாலும் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சிலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகக் கையாள்வதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான மருத்துவர் மற்றும் செவிலியர்களைத் தனி வார்டில் வைத்துப் பராமரிக்க வேண்டும், அனைவருக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், கரோனா வார்டில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், பணி நேரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மருத்துவமனையின் செவிலியர்களும் இதர பணியாளர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகம் முன்பாக ஏராளமான செவிலியர்கள் மற்றும் மருத்துவப்ப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் டிஎஸ்பியான கார்த்திகேயன், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் சிதம்பரம், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கிருஷ்ண மோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.