தமிழகம்

அபார நினைவாற்றலால் சாதனை படைக்கும் ஈரோடு சிறுவனுக்கு விருது

செய்திப்பிரிவு

உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் ஈரோடு மாவட்ட சிறுவனுக்கு கொங்கு நண்பர்கள் குழு சார்பில், ‘இளம் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கொடு முடியை அடுத்த பெரியவட்டம் கிராமத்தைச் சேர்ந்த கே.என்.பெரியசாமி, பூங்குழலி தம்பதி யின் மகன் பெ.சுகனேஷ் (5). இந்தசிறுவனுக்கு மனப்பாடம் செய்யும் சக்தி அபராமாக இருப்பதை 2 வயதிலேயே அறிந்த அவரது தந்தை பெரியசாமி அதற்கேற்ப பயிற்சிகளை சுகனேஷூக்கு அளிக்க தொடங்கினார். அதன் விளைவாக பல்வேறு பரிசுகள், பட்டங்களுக்கு சொந்தக்காரராக சுகனேஷ் மாறியுள்ளார்.

கேட்டு அறிதல்

இதுகுறித்து பெரியசாமி கூறியதாவது:பத்திரிகை புகைப்படங்கள், டிவி செய்திகளை கவனிப்பதில் சுகனேஷ் ஆர்வமாய் இருந்தார். குறிப்பாக தலைவர்கள் டி விக்களில் தோன்றினால், இது யார்? என்று கேட்டு தெரிந்து கொண்டு, அதன்பின் அந்த தலைவர் படத்தை எப்போது பார்த்தாலும் மறக்காமல் சொல்ல ஆரம்பித்தார்.

மகாத்மா காந்தியில் தொடங்கி மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி வரை இப்போது 100-க்கும் மேற் பட்ட இந்திய அரசியல் தலைவர் களின் முகங்கள் சுகனேஷ்க்கு அத்துப்படியாக தெரியும்.

இத்திறனை மேலும் வளர்க்கும் வகையில், உலக நாடுகளின் கொடிகளை காட்டி சொல்லி கொடுத் தோம். இதனால், 150 நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்ட முடிகிறது. இதுதவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகர்கள், தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், 50-க்கும் மேலான திருக்குறள், 99 குறிஞ்சிப் பூக்கள் பட்டியல் என தனது அபாரமான திறனை வெளிப்படுத்தக் கூடியவனாக சுகனேஷ் வளர்ந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குறளின், ‘காதலராக’ விளங்கும் பாஜக எம்.பி தருண் விஜய் கரூர் வந்திருந்தபோது, அவரிடம் திருக்குறளை ஒப்பித்து காட்டி பரிசு பெற்றுள்ள சுகனேஷ், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளிடம் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

சாதனையாளர் விருது

அண்மையில் சென்னையில் நடந்த விழாவில் கொங்கு நண்பர்கள் குழுவினர் சுகனேஷூக்கு ‘இளம் சாதனையாளர்’ விருது வழங்கியுள்ளனர். வேலப்பம் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் சுகனேஷின் தாய் பூங்குழலி, தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் இத்தகைய சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT