ஊரடங்கு காரணமாக காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விளைபொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாமல் விளைநிலங்களிலேயே அவற்றை அழிக்கும் விவசாயிகள், எதிர்காலத்தில் பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டும் இந்த வழக்கு இன்று (மே 8) நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இந்த மனு தொடர்பாக ஏன் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் 12-ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.