கோயில் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்க.பணீந்திர ரெட்டி, சார்நிலைஅலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசு அலுவலகங்கள் இயங்குவது தொடர்பாக அறிவுரைகளுடன் கூடிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர் கள் தினமும் அலுவலகத்துக்கு வர வேண்டும். மற்ற பணியாளர்களில் 33 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும்.
அனைத்து கோயில்களிலும் வெளித் துறை பணியாளர்கள் 33 சதவீதம் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். உள்துறை பணியாளர்கள் தேவைக்கு ஏற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்கள் முகக் கவசத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்ற வேண்டும்.கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்ற நபர்களை அனுமதிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல்அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை அனுமதிக்க கூடாது. அலுவலக வளாகத்தில் கைகழுவும் திரவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அலுவலக வளாகம் தினமும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
வெளிநபர்கள் அலுவலகத்துக்கு அவசியமாக வருகை புரிந்தால் கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.