தமிழகம்

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையைக் கைவிடுக: நடராஜன் எம்.பி. கோரிக்கை

கா.சு.வேலாயுதன்

மத்திய அரசின் உத்தரவை மீறி, பொதுமுடக்கக் காலத்தில் அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஸ்என்எல் நிறுவனம் தனது ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் என கோவை எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவருமான பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஊதியம்கூட இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது வேதனையாகும். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நலத் திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவர்களுக்கு கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அந்தத் தொழிலாளர்கள் பலமுறை முறையிட்டும், பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும், என் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னரும்கூட தற்போதுவரை ஊதியம் தரப்படவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழக பிஎஸ்என்எல் நிர்வாகம், ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் இருந்து விரட்ட முயல்கிறது.

பொதுமுடக்கக் காலத்தில் எந்தத் தொழிலாளியையும் வேலையை விட்டு நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனமானது புதிய முறையிலான டெண்டர் என்று கூறி தனது ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய முயல்வது முரணாக உள்ளது. தனியார் துறைக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டிய அரசு நிறுவனமே இப்படித் தொழிலாளர்களைப் பணிநீக்க முயன்றால் தனியார் துறையின் அத்துமீறல் நடவடிக்கையைக் கேள்வி கேட்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுவோம் என்பதைக்கூட உணராதது வேதனை. மேலும், பத்து மாத காலமாக ஊதியமே வாங்காமல் வேலை செய்யும் அவர்களைப் பணியில் இருந்து விரட்டுவதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிய டெண்டர் முறையில், டெண்டர் எடுத்தவருக்கு இந்தப் பொதுமுடக்கக் காலத்திலேயே, அவர் செக்யூரிட்டி டெப்பாசிட் கட்டினாலும் சரி, கட்டா விட்டாலும் சரி என்று டெண்டர் வழங்கப்படுகிறது. டெண்டர் எடுத்தவரோ அல்லது அவரது நிர்வாகியோ எடுத்த பணிகளுக்கு ஆட்களை நியமிக்கக்கூட இயலாத வண்ணம் பொது முடக்கம் இருக்கையில், வேண்டுமென்றே நிர்வாகம் அவர்களுக்கு டெண்டர் கொடுப்பதன் நோக்கம் என்ன?

பொதுமுடக்கக் காலத்தில், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கையை ஏற்க முடியாது. சமூகத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் போராட இயலாத சூழலைப் பயன்படுத்தி, பரிதாபகரமாக வாழ்க்கையை நடத்தி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியமும் தராமல், அவர்களைப் பணியில் இருந்து விரட்டுவதற்காக தமிழக பிஎஸ்என்எல் நிர்வாகம் முயற்சி செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது. அவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெண்டர் முறையை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும் என தமிழக பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு நடராஜன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT