சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து 163 இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பல கடைகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மதுப்பிரியர்கள் கரோனா தொற்று அச்சமின்றி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் 216 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது, நிபந்தனைகளுடன் இன்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, மாவட்டம் முழுவதும் 163 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. பல நாட்கள் கழித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு கடை முன்பும் ஆயிரக்கணக்கான மதுப்பிரியர்கள் திரண்டனர்.
கரோனா தொற்று பரவும் அபாயத்தைத் தடுக்க மூன்று அடி இடைவெளிவிட்டு நின்று, மதுபாட்டில் வாங்கிச் செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சேலம் மாவட்டத்தில் பல டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவர்கள் கரோனா தொற்று நோய்க் கிருமி பரவும் அபாயத்தை மறந்து, முண்டியடித்தும், நெருங்கி நின்றபடியும் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
அதேசமயம், சேலம் மாநகரத்தின் முக்கியப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் வெயில் தாக்கத்தைத் தவிர்க்க பந்தல் அமைத்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, "சேலம் மாவட்டம் முழுவதும் 216 டாஸ்மாக் கடைகளில் 163 கடைகள் இன்று திறக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வழக்கமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை மூலம் நாளொன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் விற்பனையாகும்.
தற்போது, ஊரடங்கால் மூடப்பட்டு மீண்டும் கடை திறக்கப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டே, மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் கடை திறப்பதற்கு முன்பாகவே மதுவாங்க பலர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. கடை திறக்கப்பட்டதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டே மது விற்பனை நடைபெற்றது" என்றனர்.