டாஸ்மாக் கடை திறப்பால் நாட்டில் ஏழ்மையும் வன்முறையும், வறுமையும் அதிகரிக்கும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
டாஸ்மார்க் கடை திறப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இன்று (மே 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் அவரது இல்லத்தின் முன்பு இன்று கட்சியினர் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் இருவரை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராகவும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதைத்தொடர்ந்து அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்பது மோடி அரைசையும், எடப்பாடி பழனிசாமி அரசையும் எதிர்த்து நடைபெறுகிறது. டாஸ்மாக் கடை திறப்பால் நாட்டில் ஏழ்மையும், வன்முறையும், வறுமையும் அதிகரிக்கும். 40 நாள் பொதுமக்கள் குடிப்பழக்கத்தை மறந்து இருக்கின்றனர். மீண்டும் மதுக்கடைகளை திறந்து விட்டு அவர்களுக்குக் குடியை ஞாபகப்படுத்த வேண்டாம்.
அதிக தொற்றே இல்லாத கேரளாவில் மதுக்கடைகளை திறப்பது குறித்து 17-ம் தேதிக்குப் பிறகு தான் முடிவு செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தொற்று அதிகரிக்கும் இந்த நேரத்தில் மதுக்கடைகளை திறந்து விடுவது ஆபத்தானதாகும். மேலும், மத்திய அரசு, மாநில உரிமைகளை பறித்து வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.
40 நாள் ஊரடங்கு போடப்பட்டது. இதில் 40 கோடி ஏழை தொழிலாளர்கள் 20 கிலோ அரிசியை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வார்கள்? மேலும் ஏழைகளுக்குப் பணத்தைத் கையில் கொடுக்க வேண்டும் என எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூறியதை போல், ஏழைகளுக்கு 63 ஆயிரம் கோடி கொடுப்பதற்கு பணம் இல்லை. ஆனால், 50 முதலாளிகளுக்கு 68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்வது நாட்டில் கொடுமையான விஷயம்.
அதேபோல, நாற்பது நாள் கண்விழித்து உழைத்த அரசு ஊழியர்கள், காவல்துறையினரின் உழைப்பும் மற்றும் சுகாதாரத் துறையினர் உழைப்பும் வீணாகி விட்டது.
தற்போது அவர்களை எல்லாம் டாஸ்மாக் கடைகளுக்குக் காவல் நிறுத்தி இருப்பது கொடுமை. இதனை தமிழக காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. மதுப்பிரியர்களை தனிமனித இடைவெளியில் நிற்க வைத்து மது வாங்க வைப்போம் என கூறுகின்றனர். ஆனால், மதுப்பிரியர்கள் எப்படி அதை காதில் வாங்கிக்கொண்டு செயல்படுவார்கள் என தெரியவில்லை"
இவ்வாறு கூறினார்