கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த மூவர் இன்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால், தென்காசியில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 51 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குடியைச் சேர்ந்த மேலும் 3 குணமடைந்ததால் இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது புளியங்குடியைச் சேர்ந்த 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 9 பேர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், 26 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதார துணை இயக்குநர் ராஜா தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்படும் 13 ஊழியர்கள்:
இந்நிலையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் 13 பேர் ஒரு வாரம் பணி முடிந்து தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
வர்களை மருத்துவமனை கண்காணிப்பாளர், ஜெஸ்லின், மூத்த மருத்துவர் முகைதீன் அகமது, செவிலியர் கண்காணிப்பாளர்கள் மேரி புஸ்பம், திருப்பதி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் நடவடிக்கையால் ரிசார்ட்டில் 13 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறினார்.
தென்காசி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பணியாளர்கள் தங்களை ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள குற்றாலம் ரிசார்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.