மதுரையில் ‘கரோனா’ ஊரடங்கால் வீடுகளில் குடிநீர் பயன்பாடு அதிகரிப்பால் ஒரு நாளைக்கு 4 1/2 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 19 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களை சேர்த்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன.
வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கும், மற்ற வர்த்தக குடிநீர் இணைப்புகளுக்கும் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்கிறது.
ஒரு நாளைக்கு மாநகராட்சிக்கு 175 எம்எல்டி (ஒரு எம்எம்டி என்பது 10 லட்சம் லிட்டர்) குடிநீர் தேவை தற்போது உள்ளது. ஆனால், 130 எம்எல்டி குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது.
நிரந்தரமாகவே 45 எம்எல்டி(4 1/2 கோடி லிட்டர்) பற்றாக்குறையாகவே மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்கிறது. தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் ரயில்வே, அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாங்கள் மூடப்பட்டதால் அதற்கான குடிநீர் தேவை குறைந்துள்ளது. ஆனால், ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அதனால், வீடுகளில் குடிநீர் பயன்பாடு முன்பை விட அதிகரித்துள்ளது. அதனால், மாநகராட்சியில் வழக்கமான நாட்களை போல் குடிநீர் பற்றாக்குறை இந்த கோடைகாலத்தில் அதிகரித்துள்ளது.
பற்றாக்குறை வார்டுகளில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதிலும் மாநகராட்சி வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வணிக குடிநீர் பயன்பாடு குறைந்தாலும் வீடுகளில் குடிநீர் செலவினம் அதிகரித்துள்ளதால் ஒரு நாளைக்கு 15 முதல் 30 எம்எல்டி குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்த குடிநீர் பிரச்சனையை தீர்க்வே பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தில் 125 எம்எல்டி குடிநீர் பெறப்படுகிறது.
அதன் மூலம் மாநகராட்சியின் நிரந்தர குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய முடியும், ’’ என்றார். பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘வைகை அணை நீர் மட்டம் 43.71 அடியாக உள்ளது.
நீர் வரத்து 44 கன அடியாக உள்ளது. குடிநீருக்காக மட்டும் 60 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெரியார் அணை நீர் மட்டம் 112.70 அடியாக உள்ளது. அணைக்கு 125 கன அடி வருகிறது. 125 கன அடி வைகை அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
தற்போது போதுமான தண்ணீர் வைகை அணையில் இருப்புள்ளதால்மதுரைக்கு ஜூன் வரை குடிநீர் பற்றாக்குறை வராது. மாநகராட்சியின் குடிநீர் விநியோக முறை குளறுபடியாலே மதுரையில் செயற்கை குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, ’’ என்றார்.