முதல்வர் இல்லம் அருகே பணியாற்றிய பெண் காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக வந்த செய்திக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''முதல்வர் இல்லம் அருகே கிரீன்வேஸ் சாலையில் பணியில் இருந்த பெண் தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மை அல்ல. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவைச் (SCP) சேர்ந்த பெண் தலைமைக் காவலர் முதல்வர் இல்லப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
அவர் கிரீன்வேஸ் சாலையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை பணியில் இருந்தார். அதன் பிறகு அவர் அங்கு பணியில் இல்லை. பின்னர் மே 3-ம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனை செய்யபட்டது. மே 6-ம் தேதி அன்று (நேற்று) அவருக்கு கரோனா தொற்று உள்ளதாகத் தெரிவித்ததின்பேரில், பெண் தலைமைக் காவலர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. எனவே, மேற்படி பெண் காவலருக்கு கரோனா தொற்று இருப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நோய்த் தொற்று வராமல் இருக்க அனைத்துவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”.
இவ்வாறு சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.