கரோனா களேபரங்கள் இல்லாதிருந்தால் இந்நேரம் கள்ளழகர் வைகை ஆற்றில் கோலாகலமாக இறங்கியிருப்பார். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவில்லை. லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடும் மதுரை வெறிச்சோடிக் கிடக்கிறது.
ஆனாலும், மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வழக்கம்போல விரதம் இருந்த சிலர், இரவோடு இரவாக மதுரைக்கு வந்து அழகர் இறங்கும் வைகைக் கரைக்கு வந்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்து அழகர் இருப்பதாக நினைத்து சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கையும் செலுத்தினார்கள். இதனால் நள்ளிரவு முதல் காலை 7 மணி வரையில் எப்போதும் 10 முதல் 20 பக்தர்களாவது திருவிழா சாட்சியாக ஆற்றங்கரையில் இருந்தார்கள்.
இதுபற்றித் தகவல் அறிந்ததும் மதிச்சியம் போலீஸார் விரைந்து வந்து பக்தர்களை அகற்றினர். ஆற்றங்கரையில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் தங்கராம் வீட்டு முன்பு ஒரு கூட்டம் இருப்பதைக் கண்ட போலீஸார் அங்கே போய்ப் பார்த்தபோது, அவர் தன்னுடைய வீட்டில் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற சிலையை உருவாக்கி வைத்திருந்தார். இதற்கு அனுமதியில்லை என்று போலீஸார் கூறியபோது, அவருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவரை எச்சரித்துவிட்டு போலீஸார் புறப்பட்டுச் சென்றனர்.
இதுபற்றி தங்கராமிடம் கேட்டபோது, "ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஊரடங்கைக் காட்டி ரத்து செய்துவிட்டார்கள். மீனாட்சி திருக்கல்யாணத்தைப் போல நேரடி ஒளிபரப்பாவது செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. எனவேதான், துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து அழகர் சிலையை உருவாக்கி, மரக்குதிரை சிற்பத்தைக் கொண்டுவந்து அதன் மீது அழகரை அமர வைத்து வீட்டிலேயே பூஜை செய்தேன்.
வழக்கமாக, விஎச்பி சார்பில் அழகர் திருவிழாவுக்கு அன்னதானம் போடுவோம். இந்த ஆண்டு இதையாவது செய்யலாம் என்று பார்த்தால் போலீஸார் தடுத்தார்கள். மொட்டை போட்ட சில பக்தர்களைக் கைது செய்வதுபோல, தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள் போலீஸார். அதில் ஒருவர் பாதி மொட்டையுடன் இருந்தார். எனவே, எனக்குக் கோபம் வந்துவிட்டது. 'முழுதாக மொட்டை போடட்டுமே, அதற்குள் என்ன வந்துவிடப் போகிறது?
டாஸ்மாக் கடைக்கு காவல் காக்கிற உங்களால், இந்த பக்தர்களை சமூக இடைவெளி விட்டு நேர்த்திக்கடன் செலுத்தச் செய்வதை உறுதி செய்ய முடியாதா?' என்றேன். 'நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்' என்றார்கள். 'இதுவும் என் வேலைதான்' என்றேன். அதன் பிறகே போலீஸார் சென்றனர்" என்றார்.