தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பதற்குக் காரணமே திமுகதான். அடுத்த தேர்தலில் நாங்கள் வென்றுவிடுவோம் என்கிற பயத்தில் திமுகவினர் ரூ.380 கோடி கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோர் மூலம் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
“மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்வர் நேரடியாக மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக திருவிக நகர் மண்டலத்தில் ஆய்வு நடத்துகிறோம். இந்த மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் கரோனா தொற்று உள்ளது. அதிலும் குறிப்பாக 77, 68, 73 ஆகிய மூன்று வார்டுகள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன.
நாளடைவில் பரவல் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவிக நகர் மண்டலத்தில் மொத்தம் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கிருமி நீக்க நடவடிக்கை, மருந்து வழங்குவது, உள்ளிட்ட பணிகளைச் செய்கிறோம். இந்தப் பகுதியில் வசிக்கும் துப்புரவுப் பணியாளர்களை பணிக்கே வரவேண்டாம் எனக் கூறி, அவர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறோம்.
இதுவரை இங்கு 1,342 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மொபைல் வாகனம், ஆய்வகம் என 2 ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திருவிக நகரில் விரைவில் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இங்குள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வளவு பிரச்சினை உள்ள நேரத்தில் ஊரடங்கு தளர்வு என்பது நாம் அதை முற்றிலும் விலக்கிக் கொள்ளவில்லை. ஊரடங்கு உள்ளது. நாம் தன்னிச்சையாக எதையும் செயல்படுத்த முடியாது. உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு கொடுக்கிற வழிகாட்டுதல், மத்திய- மாநில பொது சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரை அடிப்படையில்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது மத்திய, மாநில சுகாதாரத்துறையின் பரிந்துரைதான். நாமாக எந்த நடவடிக்கையும் தனியாக எடுக்கவில்லை.
டாஸ்மாக் மது விற்பனையைப் பொறுத்தவரை எங்கள் கொள்கை மது தேவை இல்லை என்பதுதான். தேர்தல் அறிக்கையிலும் அதைத்தான் கூறினோம். மது ஒரு சமூகப் பிரச்சினை. மதுப் பிரச்சினைக்கு, மதுக் கடைகள் திறப்புக்கு அடிப்படைக் காரணமே திமுகதான். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிதான். அவர் அன்று மதுவிலக்கை ரத்து செய்தார். அன்று ராஜாஜி அவர் கையைப் பிடித்துக் கெஞ்சினார்.
அதன் பின்னர் எம்ஜிஆர் மதுவிலக்கைக் கடுமையாகக் கொண்டுவந்தார். ஆனால் கள்ளச்சாராயம் பெருகியது. மெத்தனால், எத்தனாலைக் குடித்து மக்கள் உயிரிழந்தார்கள். அதனால் மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. படிப்படியாகக் கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளைக் குறைத்தார். முதல்வர் பதவி ஏற்றதும் 500 கடைகளை மூடும் கோப்பில் கையெழுத்திட்டார். உயர் நீதிமன்றம் கடைகளை மூடச் சொன்னது. அதன் அடிப்படையில் இதுவரை 1,600 மதுக்கடைகளை மூடியுள்ளோம். மீதி 4,400 மதுக்கடைகள் உள்ளன. இவற்றைப் படிப்படியாக ஒழிக்கும் நடவடிக்கை தொடங்கும்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்களாக மதுக்கடைகளைத் திறப்பதுபோல் உள்ளது. மத்திய அரசு திறக்கச் சொன்னது. அதிலும் நாங்கள் முதலில் திறந்தோமா? மற்ற மாநிலங்களில் திறக்க ஆரம்பித்தார்கள். கர்நாடகாவில், ஆந்திராவில் திறந்தார்கள்.
போலீஸார் கரோனா தடுப்புப் பணியில் இருக்கும்போது அண்டை மாநிலங்களிலிருந்து சாராயம் கடத்தப்படுவதும், அங்கு போய் குடிப்பதும், இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்தன. இதில் போலீஸார் உழைப்பு வீணாகும் நிலை ஏற்பட்டது. அதனால்தான் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
கரோனா ஒழிப்பில் 2-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்குப் போய்விட்டோம். படிப்படியாகக் குறைத்து வருகிறோம். இதனால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் அதிகரித்து வருகிறது. அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிற ஆற்றாமையால் தான் திமுக எங்களைக் கடுமையாக எதிர்க்கிறது.
கோயபல்ஸ் பாணியில் திமுக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. 380 கோடி ரூபாய் கொடுத்து பிஹாரிலிருந்து இறக்குமதியான பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி திமுக பிரச்சாரம் செய்கிறது”.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.